Tuesday 29 April 2014

பிச்சைக்காரன் என்று நினைத்து VIPக்கு 10 ரூபாய் தர்மம் செய்த பெண்

ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து பிரபல கண் டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் ஓர் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் ரஜினிகாந்த சந்தித்த ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
  
பெங்களூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலுக்கு குஜராத்தை சேர்ந்த ஒரு பெண்மணி தரிசனத்துக்காக வந்திருந்தார்.

கோயில் தூணின் ஓரமாக சாய்ந்து அமர்ந்திருந்த ஒருவரின் தோற்றத்தை கண்டு இரக்கப்பட்ட அந்த பெண் தனது கைப்பையில் இருந்து 10 ரூபாயை எடுத்து அவருக்கு தர்மமாக போட்டார்.

எப்போதும் போல் எளிமையான உடையில் தரிசனத்துக்காக வந்து தூணின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்த ரஜினிகாந்துக்கு அந்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை அளித்தது. இருப்பினும், அதை வெளிப்படுத்திக்கொள்ளாத ரஜினிகாந்த் அந்த 10 ரூபாயை வாங்கிக்கொண்டு அமைதியாக கோயிலுக்குள் சென்றார்.

சிறுது நேரம் கழித்து தரிசனம் முடிந்ததும் தனது காரை நோக்கி தனக்கே உரித்தான மிடுக்கான நடையில் அவர் சென்றபோது அவரை அடையாளம் கண்டுகொண்ட அந்த பெண் நடந்த தவறுக்காக ரஜினிகாந்திடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்.



அந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறிய ரஜினிகாந்த், சற்றும் அலட்டிக்கொள்ளாமல் அந்த பெண்ணிடம் சாவகாசமாக சொன்னார்.. 'அம்மா, என்னுடைய நிரந்தரமான இடம் எதுன்னு அப்பப்போ.. கடவுள் எனக்கு நினைவுப்படுத்திக்கிட்டே இருப்பாரு. இப்ப.. உங்க மூலமா எனக்கு 10 ரூபாய் பிச்சை போட்டு மறுபடியும் நான் சூப்பர் ஸ்டார் இல்லைன்னுற உண்மையை எனக்கு அவர் உணர்த்தி இருக்காரு' என்று ரஜினிகாந்த் சாந்தமாக பதில் அளித்ததாக டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் அந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment