Friday 20 March 2015

அத்வைதம் துவைதம் II

மத்வாரின் துவைதம் ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு, இரண்டும் தனித்தனி என்பதாகும். நமக்கு முன்னும் நமக்குப் பின்னும் இறைவன் இருப்பதால் இறைவன் வேறு, நாம் வேறு, என எண்ணி இறைவனையும், நம்மையும் இரண்டாகப் பார்ப்பது துவைதம். 
இராமானுஜரின் விஷிஷ்டாத்வைதம் ஜீவாத்மா பரமாத்மாவின் ஒரு சிறிய பகுதி. அதாவது ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒரே பொருளால் ஆனவைதான். ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்துதான் வெளிப்பட்டது. சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து. பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈசுவரன் என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர். சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை என்பது அவர் கருத்து. 
ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவம் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே இரண்டும் வேறல்ல என்பதாகும். இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பது அத்துவைதம்.(துவைதம் அற்ற நிலை, இரண்டற்ற ஒருமை நிலை.) 
அத்வைதம், துவைதம் இந்த இரண்டு கோட்பாடுகளையும் ஏற்றுக் கொள்வது விசிஷ்டாத்வைதம்.(செவ்விருமை)


இது பற்றி  குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் பேசும் பொழுது அவர் சொன்ன விளக்கம் என்னவென்றால், 
நமக்கு முன் உணவு (துவைதம்)
வயிற்றுக்குள் உணவு (விசிட்டாத்துவைதம்)
உணவு நம் உடலில் சத்தாக மாறிய நிலை (அத்துவைதம்). 

சுவாமி விவேகானந்தர் இந்த மூன்றையும் இணைத்து அருமையான யோக விளக்கத்தை அருளினார்.
ஆன்மிகவாதியின் தொடக்க நிலை துவைதம். இடைப்பட்ட நிலை விசிஷ்டாத்வைதம். முடிந்த முழுமையான நிலை அத்வைதம் என்றார். 


No comments:

Post a Comment