Sunday 29 June 2014

கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய பாகத்தை ஏமாற்றிய குசேலர்

கிருஷ்ணருடைய பால்ய சினேகிதராக விளங்கியவர்களில் குசேலர் என்கிற சுதாமாவும் ஒருவர். ஒன்றாக குருகுலத்தில் படித்தவர்கள். ஒருநாள் குருபத்தினி, கிருஷ்ணருக்கும் குசேலருக்கும் அவல் தயாரித்து கொடுத்தார். ஆனால் குசேலரோ கிருஷ்ணணுக்கு அதை சரிபங்கு கொடுக்காமல் அத்தனை அவலையும் குசேலனே சாப்பிட்டார். அதை நினைத்து கிருஷ்ணர் கவலைப்படவில்லை. ஆனால் குருவோ, “குசேலன் செய்த மிகப் பெரிய பாவச்செயல் இது.” என்றார். “இதனால் குசேலா நீ வறுமையில் வாடுவாய்.” என்றார். சிறு வயதில் நடந்த இந்த சம்பவத்தை காலம், மறக்கச் செய்தது. குசேலருக்கு திருமணம் நடந்தது. குழந்தைகள் பிறந்தனர். சந்தர்பத்திற்காக காத்திருந்த விதி, தன் வேலையை தொடங்கியது. குசேலன் வறுமையில் வாடினார். 

“எனக்கு இல்லையெனாலும் பராவாயில்லை, ஆனால் நம் குழந்தைகள் உடுக்க மாற்று ஆடை கூட இல்லாமல் இருக்கிறதே. உயிர் வாழ அடுத்த வேளை சாப்பாடும் இல்லையே.” என்று அழுதாள் குசேலனின் மனைவி சுசீலை. 

“எல்லாம் நம் விதி.” என்றார் குசேலர். 

“திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பார்களே. தெய்வம் போல இருக்கிறாரே உங்கள் நண்பர் கிருஷ்ணர். அவரை சந்தித்து வாருங்கள்.” என்றாள் சுசீலை. “கிருஷ்ணரிடம் உதவி கேளுங்கள்.” என்று சொன்னால், அது கணவரின் மனதை பாதிக்கும் சொல்லாகிவிடுமோ என்று அஞ்சிதான் சுசீலை, 

“கிருஷ்ணரை சந்தித்து வாருங்கள்.” என்றாள். மனைவியின் யோசனையை ஏற்று குசேலன், கிருஷணரை சந்திக்க புறப்பட்டார். அப்போது சுசீலை தன் கையில் சிறு மூட்டையுடன் வந்தாள். “பல வருடங்களுக்கு பிறகு உங்கள் நண்பரை சந்திக்க செல்கிறீர்கள். 

கிருஷ்ணருக்கு அவல் என்றால் மிக பிடிக்கும் என்பீர்களே. இதோ இதில் கொஞ்சம் அவல் இருக்கிறது. கொண்டு செல்லுங்கள்.”

 “சுசீலா.. இன்னும் நீ கிருஷ்ணரை சிறுவனாகவே நினைத்துவிட்டாய். இன்று அவன் இருக்கும் நிலையே வேறு. என்னை சந்தித்தாலே அது ஆச்சரியம். இந்த நிலையில் நான் தரும் அவலையா அவன் சாப்பிட போகிறான்.? சரி.கொடு.” என்று வாங்கி புறப்பட்டார். குசேலர் என்பவர் வந்திருப்பதாக கிருஷ்ணரிடம் பணியாளர்கள் சொன்ன உடன் வாசலுக்கு ஓடோடி வந்தார் கிருஷ்ணர். 

குசேலனை கட்டித்தழுவி உள்ளே அழைத்துச் சென்றார். இந்த வரவேற்பை குசேலன் கனவிலும் நினைக்கவில்லை. மனைவி ருக்மணியிடம், “இவன் என் நண்பன் சுதாமா.” என்று குசேலரை அறிமுகப்படுத்தினார். குசேலரின் விழிகளில் கண்ணீர். வறுமையின் காரணமாக கந்தலான ஆடைகளையே அணிந்துக்கொண்டிருப்பதால் தன்னை எல்லோரும் குசேலன் என்று அழைக்க, தன் நண்பன் மட்டும் அதே பழைய பாசத்துடன் சுதாமா என்று அன்புடன் அழைக்கிறானே.” என்று கலங்கி போனார் குசேலன். 

ருக்மணி உள்ளே சென்று தன் கையில் பெரிய தங்க தட்டில் பழங்களை கொண்டு வந்தாள். “சாப்பிடு சுதாமா” என்றார் கிருஷ்ணர். தங்க தட்டில் பழங்களை எனக்கு தந்த கி்ருஷ்ணர் எங்கே?, அழுக்கு மூட்டையில் அவல் கொண்டு வந்த நான் எங்கே?” தன் மனைவி சுசீலையின் அறியாமையை கண்டு வேதனை அடைந்தார். எல்லாம் அறிந்த கிருஷ்ணருக்கு நண்பனின் மனநிலை தெரியாதா என்ன? “அண்ணி எப்படி இருக்கிறார்கள் சுதாமா.? எனக்கு என்ன தந்தனுப்பினார்கள்.? அது என்ன மூட்டை?.” என்றார் கிருஷ்ணர். குசேலன் மூட்டையை பிரித்து அவலை கையில் எடுத்தான். அதை ஆசையாக வாங்கி சாப்பிட்டார் கிருஷ்ணர். 


“அடேங்கப்பா, என் பங்கு அவல் கிடைக்க எத்தனை வருட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது பார்த்தாயா.” என்று சிரித்தார் கிருஷ்ணர். குசேலரும் சிரித்துவிட்டார். இவர்கள் என்ன பேசுகிறார்கள்? ஏன் சிரிக்கிறார்கள்? என்று புரியாமல் விழித்த ருக்மணி, நாமும் சிரித்து வைப்போம் என்று சிரித்தாள். எதுவும் புரியாமல், புரிந்தது போல சிரிக்கிறாளே என்று கிருஷ்ணர் மேலும் சிரித்தார். 

நண்பர் கிருஷ்ணரை சந்தித்த மனமகிழ்ச்சியுடன் விடைப்பெற்றார் குசேலர். கிருஷ்ணரிடம் உதவி கேட்காமல் திரும்புகிறோமே என்ற வருத்தம் குசேலனிடம் இல்லை. நண்பனின் அன்பே போதும் என்று வீடு திரும்பினார். அங்கே தன் இல்லம் பொன்மயமாக ஜொலிப்பதை கண்டு, எல்லாம் கிருஷ்ணரின் செயலே, என்று மகிழ்ந்து போனார்.


No comments:

Post a Comment